பிரதமர் மோடி - முதலவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு (கோப்புப்படம்) 
தமிழ் நாடு

மோடியை சந்திக்கும் ஸ்டாலின்!

Staff Writer

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.

பாஜக 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்குமாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளில் நிதி ஆயோக் ஈடுபடுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9ஆவது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வரும் 26ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 3ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி, தமிழக நலன் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நிதி ஆயோக் 2023-24ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடுகளில் பெரும்பாலானவற்றில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளதாகவும், வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram