தமிழக மீனவர் 
தமிழ் நாடு

தமிழக மீனவருக்கு 16 மாதங்கள் சிறை; ரூ.1.6 கோடி அபராதம்!

Staff Writer

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தை முன்னிட்டு அங்கிருந்து 50 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். ஒரு நாள்கூட ஆகாதநிலையில் புதுக்கோட்டை மீனவர் ஒருவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நால்வருக்கு தலா 40 இலட்சம் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பா.ம.க.  நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவங்களை விவரித்துள்ளார். 


தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.  

”பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 21 -ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களும்,  புதுக்கோட்டையிலிருந்து கடந்த மாதம் 4 மற்றும் 7-ஆம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களும் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பூம்புகார் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரும்  விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேரில் ஒருவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  அதேபோல்,  மீனவர்களுக்கு  தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர்களால் செலுத்த முடியாததால் அவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றும், 

”ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள்  22 பேருக்கு   இலங்கை  ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். இராமேஸ்வரம் மீனவர்கள் மூவருக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களைப்போல மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள்  அபராதம் விதிக்கப்பட்டும்,  சிறை தண்டனை விதிக்கப்பட்டும்  இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் ஏழ்மையில் வாடும் நிலையில், அவர்களால் அபராதத்தை செலுத்த முடியாது  என்பதால் அந்த மீனவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது தெரியவில்லை.” என்றும் இராமதாசு வேதனை தெரிவித்துள்ளார். 


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தண்டம் விதிக்கப்பட்டும், சிறை தண்டனை விதிக்கப்பட்டும் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் படகுகளுடன்  விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத்  தீர்வு காண நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram