அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கமலா ஹாரிஸ் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். அகதிகளை கணக்கெடுப்பதற்காக ஆங்கிலேய அரசு, பி.வி. கோபாலனை ஜாம்பியா நாட்டுக்கு அனுப்பியது. குடும்பத்துடன் ஜாம்பியா நாட்டுக்குச் சென்றவர் பணி முடிந்ததும் அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
பி.வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா. இவருடைய மகள் தான் கமலா ஹாரிஸ். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது இவருக்கான சிறப்பு.
தற்போது, அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இன்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார்.
இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.