கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

செந்தில் பாலாஜி கம் பேக் - கோவை அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பஞ்ச் டயலாக்!

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணமாக கோவை மாவட்டத்துக்குச் சென்றுள்ளார். கோவை, அனுப்பர்பாளையத்தில் அமைக்கப்படும் தந்தை பெரியார் நூலகம்- அறிவியல் மையக் கட்டடத்துக்கு அவர் இன்று அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், விழாவுக்கான ஏற்பாடுகளுக்காக அமைச்சர்கள் வேலு, செந்தில்பாலாஜி, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோரைப் பாராட்டினார்.

மேலும், “கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம் பேக் Comeback கொடுத்திருக்கிறார் நம்முடைய செந்தில் பாலாஜி அவர்கள்! அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப் பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள்.” என்று குறிப்பிட்டார்.

“அதற்குள் விரிவாக நான் போக விரும்பவில்லை! ஏனென்றால், இது அரசு நிகழ்ச்சி. ஆனால், அந்த தடைகளையெல்லாம் உடைத்து, மீண்டும் வந்திருக்கிறார்! தொடர்ந்து கோவைக்காக, சிறப்பாக செயல்படுவார், செந்தில் பாலாஜி, அது உறுதி, உறுதி!” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

”கலைஞர் நூற்றாண்டு நினைவாக, மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தேன். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் அதைப் பயன்படுத்தி பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்! அதேபோல கோவையிலும் கோரிக்கை வர, நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அறிவியல் மையமும் அமைக்கலாம் என்று கருத்துகள் வந்தவுடன், எனக்கு நினைவில் வந்தவர் தந்தை பெரியார். சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் இருக்கிறது; மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கிறது; அதனால் கோவையில் அவர்கள் இரண்டு பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகமும், அறிவியல் மையமும் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும்.

தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியார். 80 ஆண்டுகளுக்கு முன்பே, இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்று கனவு கண்ட, பகுத்தறிவு ஆசான். அறிவும் ஆற்றலும், பகுத்தறிவும் பகுத்துண்டு பல்லுயிர் காக்கும், சமூகத்து மக்களாக இன்றைய இளைய சமுதாயம் வளர- வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக, மிகச் சிறப்பாக எழ இருக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்த அடிக்கல் நாட்டு விழாவில், திறப்பு விழா தேதியையும் நான் அறிவிக்கிறேன்; துணிச்சலோடு அறிவிக்கிறேன்; தெம்போடு அறிவிக்கிறேன்; உறுதியோடு அறிவிக்கிறேன். 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்த நூலகம் திறக்கப்படும்.” என்றும் ஸ்டாலின் பேசினார்.

”கோவையின் அடையாளமாக மாற இருக்கும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன். 133 கோடி மதிப்பீட்டில் காந்திபுரத்தில் நம்முடைய அரசு உருவாக்கி வருகின்ற அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு ஜுன் திறக்கப்பட இருக்கிறது.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.