என். சங்கரய்யா 
தமிழ் நாடு

மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

Staff Writer

சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா (வயது 102) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று காலமானார்.

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவுக்கு சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டது. இதனால், திங்கள்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று என்.சங்கரய்யாவைப் பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக விசாரித்து வந்தனர். அதேபோல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் நலம் விசாரித்தார்.

சங்கரய்யாவின் மகன் நரசிம்மன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் முதலிய அக்கட்சியினர் உடனிருந்து கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.