விஜயலட்சுமி - சீமான் 
தமிழ் நாடு

விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்: சீமான் கடித விவரம்!

Staff Writer

தன் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியையும் வீரலட்சுமியையும் சேர்த்தே விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமியின் புகார்கள் தொடர்பாக, சென்னை, வளரசரவாக்கம் காவல்நிலையத்தினர் சார்பில் சீமானுக்கு இன்று மீண்டும் விசாரணை அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சீமான் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், “ இன்று 14 -9-2023 காலை வளசரவாக்கம் காவல் ஆய்வாளரால் வழங்கப்பட்ட அழைப்பாணையைப் பெற்றேன். அதில், நான் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கக் கூறப்பட்டுள்ளது. நான் நேரில் வருகிறேன். ஆனால் நேர்நிற்கும் பொழுது என் மேல் குற்றம் சாட்டும் விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகிய இருவரும் நேர் நிற்க வேண்டும். நான் ஒரு பக்கம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறேன்; இன்னொரு பக்கம் அவர்கள் எனக்கு எதிராக தொடர்ச்சியாக காணொளிகளை வெளியிட்டு அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.” என்று சீமான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர்களின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையையும் அடிப்படையும் இல்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் அதனை தொடர்ந்து பொதுவெளியில பேசி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலையைச் செய்கிறார்கள். கடந்த முறை அழைப்பாணையின்படி எனது கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த குழுவினர் வழக்கு தொடர்பான அடிப்படை விவரங்களை கேட்டபோது, ஆவணங்களை வழங்க காவல்துறையினர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்னைகள் தொடர்பாக எனது நிகழ்ச்சி நிரல்களும் பயணத்திட்டங்களும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதலால் ஒரே நாளில் ஒரே சமயத்தில் மூவரையும் வைத்து விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளக் கோருகிறேன்.” என்றும் சீமான் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.