சீமான் 
தமிழ் நாடு

ஆசிரியர் நியமனத்தில் அ.தி.மு.க. கொள்கையா?- சீமான் கேள்வி

Staff Writer

ஆசிரியர் நியமனத்தில் முந்தைய அதிமுக அரசு கடைப்பிடித்த போக்கை திமுக அரசும் தொடர்வதா என்று நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறைகூறியுள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.

ஆனால், “கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000 ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு இதுவரை பணிநியமனம் செய்யவில்லை. தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த 10 ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப்பெறாததால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களின் முந்தைய பணியையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, இருளில் தவித்து வருகின்றனர்.” என்று இன்றைய அறிக்கை ஒன்றில் சீமான் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், “ இதற்கிடையில், கடந்த 2018ஆம் ஆண்டு சூலை மாதம் அதிமுக அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஆசிரியர்கள் நடத்திய தொடர்ப் போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டும் ஆதரவு தெரிவித்தேன். மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம் என வாக்குறுதியளித்து ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதிகாரத்திற்கு வந்தது திமுக அரசு. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை நியாயமான அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்துவது நம்பி வாக்களித்த ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகம்.” என்றும் சீமான் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுசார் தலைமுறையை உருவாக்கும் அறப்பணி புரியும் ஆசிரியர் பெருமக்களை அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளி, முந்தைய அதிமுக அரசு கடைப்பிடித்த ஆசிரியர்களுக்கு எதிரானப்போக்கினை திமுக அரசும் தொடர்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

”ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்வதோடு, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை திமுக அரசு வெளியிட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.