சாந்தன் 
தமிழ் நாடு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்!

Staff Writer

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று காலமானார்.

இலங்கையை சேர்ந்த சாந்தன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வந்தன. இதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

இதன் பின்னர், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்ட சாந்தனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல் நிலையில் நேற்று முதல் கடும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த நிலையில், சாந்தன் இன்று காலை 7:50 மணிக்கு உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக , இலங்கைக்கு செல்ல வேண்டும் என சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.