சாம்சங் தொழிலாளர் போராட்டம் 
தமிழ் நாடு

சாம்சங் வேலைநிறுத்தம் வாபஸ் - அரசு அறிவிப்பு!

Staff Writer

சாம்சங் நிறுவனத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் இடையேயான பிரச்னைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு இன்று மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

” தொழிலாளர்களின் சம்பள உயர்வு, வேலைநிறுத்தம், சில விடுப்பு சலுகைகள், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து கவனம்செலுத்தி அதை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தொழிலாளர் நலத் துறைக்கும் தொழில்துறைக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், அனைத்து தொழிலாளர்களுக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் முதலமைச்சர் தெரிவித்துக்கொண்டார். மேலும், பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி இதை நல்ல முடிவுக்குக் கொண்டுவர சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு எப்பொழுதும் தொழிலாளர் நலனிலும், அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அக்கறையோடு செயல்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.  தமிழ்நாட்டின் படித்த இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும், தமிழ்நாட்டில் தொழில்வளம் சிறந்து விளங்கி, நம்மக்கள் சிறந்த வாழ்வு வாழவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளங்களை உருவாக்குவதில் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களின் உரிமைகளையும் அவர்களது நலன்களை போற்றிப் பாதுகாப்பதிலும் ஒருபோதும் பின்வாங்காமல் இந்த அரசு செயல்படும்.  அந்தவகையில் இந்த அரசு மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் காரணமாக தொழிலாளர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்ட பல முக்கியமான கோரிக்கைகள் சாம்சங் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி இருதரப்பிலும் நல்ல எண்ணங்களையும் நல்ல உறவுகளையும் ஏற்படுத்தும் வகையில் அவர்களிடையே ஒரு உடன்படிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு தொடர்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.  தொழிலாளர் நலன் காக்கவேண்டும், தொழில்வளம் பெருகவேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை தனது இரண்டு கண்களாகப் பாவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.  இந்த பிரச்சனை நடந்துகொண்டிருந்த ஒருமாத காலத்தில் பல்வேறு அமைப்புகள் பல தேவையற்ற கருத்துகளை முன்வைத்து இதனை அரசியலாக்கக் காத்திருந்த நிலையிலும், முதலமைச்சரின் அறிவுரையின்படி அதற்கெல்லாம் பதில் சொல்வதைத் தவிர்த்து, பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழியினை மட்டுமே ஆராய்ந்து அதனை தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றிக் காட்டியுள்ளது.

தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்; தொழிலாளர் நலன் காண தொடர்ந்து உறுதுணையாய் நிற்கும்!” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram