சாம்சங் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நாளை பணிக்குத் திரும்புகிறார்கள் என்று சி.ஐ.டி.யு. தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்கும் ஆலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 1350 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 37 நாள்களாக அவர்கள் நடத்திவந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
தலைமைச்செயலகத்தில் சாம்சங் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடனும் பின்னர் நிர்வாகத்தினருடனும் நேற்றுமுன்தினம் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
அதுகுறித்த முறைப்படியான கூட்டத்துக்காக, காஞ்சிபுரம் தனியார் மண்டபத்தில் இன்று சிஐடியு சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதில், அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசனும் சாம்சங் நிறுவன சங்கத் தலைவர் முத்துக்குமாரும் எடுத்துக்கூறினார்கள்.
பின்னர், நாளையிலிருந்து வேலைக்குத் திரும்புவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தலைவர்கள் இருவரும் இதை ஊடகத்தினரிடம் தெரிவித்தனர்.