DELL
தமிழ் நாடு

வழக்கு நிலுவை... துணைவேந்தருக்கு மேலும் 1 ஆண்டு பதவி!

Staff Writer

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது கிரிமினல் மோசடி வழக்கு நிலுவையில் இருக்க, அவருக்கு அடுத்த ஆண்டுவரை பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் இரா. ஜெகநாதன் நாளையுடன் பணியை முடித்து ஓய்வுபெற இருந்தநிலையில், அவரின் மீதான வழக்கு விவகாரம் முடியவில்லை. தன் மீதான வழக்கை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஜெகநாதன் உட்பட நான்கு பேர் சட்டவிரோதமாக ஒரு நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று பிரச்னை எழுந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்யவும் தேடுதல்சோதனை நடத்தவும் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் கடந்த ஜனவரி 11ஆம் தேதி அங்கு சென்றனர். அதேநாளில், ஆளுநர் இரவியும் அங்கு சென்று ஜெகநாதனைச் சந்தித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏனென்றால், அதற்கு முன்னதாக கிரிமினல் மோசடி வழக்கில் டிசம்பர் 26ஆம் தேதி ஜெகநாதன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் மறுநாள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் உட்பட 4 பேர் மீதான ஊழல் தடுப்பு காவல்துறை விசாரணை நிலுவையில் இருக்கும்போதே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வழக்கம்போல வந்து வேலைகளில் ஈடுபட்டனர்.

சாட்சியங்களை ஜெகநாதன் உட்பட்டவர்கள் கலைத்துவிடுவார்கள் எனப் புகார் கூறப்பட்டும், அவர்களை யாரும் தடுக்கமுடியவில்லை.

பா.ம.க. நிறுவனர் இராமதாசு இந்த விவகாரங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியவண்ணம் உள்ளார். இன்றுகூட அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு,  வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை  நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக  அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில், ஜெகநாதனுக்கு மேலும் ஓர் ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பது உயர்கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.