எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800கோடி டெண்டர் முறைகேட்டு ஊழல் வழக்கை சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உரிய உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. அப்படி இருக்க நாங்கள் இதில் ஏன் தலையிட வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இருப்பினும் இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாடு அரசின் பரிந்துரையுடன் கூடிய உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை தாராளமாக விசாரணை செய்யலாம். அதற்கு எந்தவித நிபந்தனையோ அல்லது மறுப்போ உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.