முதல்வர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

படிங்க... படிச்சுக்கிட்டே இருங்க! – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Staff Writer

தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் இன்று ஐம்பெரும் விழா நடைபெற்றது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 1761 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கியதோடு, 67 ஆவது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பேசியதாவது:

“கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 'தமிழ் புதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். உலக அளவில் சவால் விடும் வகையில் தமிழக மாணவர்கள் வளர வேண்டும் என்பது என் ஆசை. புதுமைப்பெண் திட்டத்தைப் பலரும் பாராட்டுகின்றனர். காலை உணவுத் திட்டம் மூலம் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

பள்ளிகளில் 21,000 ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்படும். 600 ஸ்மார்ட் வகுப்புகள் இன்று துவங்கப்பட்டுள்ளன படிங்க... படிச்சுக்கிட்டே இருங்க. படிப்பு ஒன்று தான் யாராலும் பறிக்க முடியாதது. அறிவியல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பேசு பொருள் ஆகி உள்ளது. நீட் தேர்வை முதலில் எதிர்த்தது தமிழகம் தான். இந்த தேர்வுக்கு விரைவில் முடிவு கட்டுவோம். கல்வியிலும் மோசடி செய்வதே நீட் தேர்வு.” இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.