விஜய பிரபாகரன் 
தமிழ் நாடு

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை! – விஜய பிரபாகரன் மனு

Staff Writer

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டில்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார். விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக அவர் புகார் மனு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன் கூறியதாவது:

மறுவாக்கு நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறோம். அதில் சில ஆவணங்களையும் இணைத்திருக்கிறோம்.

குறிப்பாக மதிய உணவு இடைவெளிக்குச் சென்ற சமயத்தில் 5 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையை எண்ணி முடித்திருந்தார்கள். உணவு இடைவெளி ஒரு மணி நேரம் என்றால், அதை இரண்டு முன்று மணி நேரம் நீட்டித்தார்கள். யாரையும் உள்ளே விடவில்லை. காலையில் எண்ணியிருக்க வேண்டிய தபால் வாக்குகளை, எங்களை வெளியே அனுப்பு விட்டு இரவு தான் எண்ணினார்கள். அமைச்சர்கள் அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.

தேர்தல் ஆணையம் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நீதிமன்றத்தை நாடுவோம்.”என்று விஜய பிரபாகரன் கூறினார்.