இராமதாஸ் - திருமாவளவன் 
தமிழ் நாடு

மஞ்சக்கொல்லை தாக்குதல்- இராமதாஸ், திருமாவளவன் சொல்வது என்ன?

Staff Writer

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையில் நடைபெற்ற சாதிய மோதல் பிரச்னை சில நாள்களாகப் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஒரே சம்பவம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தொடர்ச்சியாக ஒருமாதிரியாகவும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வேறுமாதிரியாகவும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை: 

“ஆறுதல் கூற சென்றோர் மீது வன்கொடுமைவழக்கா? காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி,இதயம், மூளையும் 100% அழுகி விட்டதா?


கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ்  உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மக்களாட்சிக்கு பதிலாக களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியை விட மிக மோசமான ஆட்சி நடைபெறுவதைத் தான் அற்பத்தனமான இந்த அடக்குமுறைகள் நிரூபிக்கின்றன.

மஞ்சக்கொல்லையை அடுத்த பு.உடையூர் கிராமத்தில், பாதையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை வழியை விடும்படி கூறியதற்காக செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டரை அவர்கள் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை சந்தித்து பா.ம.க மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறியுள்ளனர். செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் பா.ம.க.வினர் ஈடுபடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் கடந்து, பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசவில்லை.

ஆனால், அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கொடிக் கம்பத்தை தாக்கும்படி மஞ்சக்கொல்லையை சேர்ந்த அருள் செல்வி என்பவரை செல்வமகேஷ் தூண்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வ மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வன்கொடுமை வழக்கை கடலூர் மாவட்ட காவல்துறை பதிவு செய்திருக்கிறது. காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் அடிப்படைப் பயிற்சியே முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்வது? எவ்வாறு புலன் விசாரணை மேற்கொள்வது? என்பது குறித்தது தான். அத்தகைய பயிற்சியை கடலூர் மாவட்ட காவல்துறையினர் முறையாக பெற்றிருந்தால் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்திருக்கவே மாட்டார்கள்.

மஞ்சக்கொல்லை கிராமத்தில் செல்வமகேஷ் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளும் காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த இடத்திலும் பட்டியலினத்தவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவ்வாறு இருக்கும் போது அவர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அடுத்ததாக,  விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தைத் தாக்கிய அதே பெண்மணி தான், பா.ம.கவின் கொடிக் கம்பத்தையும் கடப்பாரைக் கொண்டு தாக்கியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது அவரை பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தான் தூண்டி விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கூறியதை  நம்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறாம் அறிவு இல்லையா?

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்வதற்கு முன் முறையாக புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது. ஆனால், அவற்றை மதிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்ட தரப்பினர் மீதே காவல்துறை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஒட்டுமொத்த சதியிலும் காவல்துறையும் பங்காளியாக இருக்குமோ? என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 1996-ஆம் ஆண்டில்  ஆட்சிக்கு வந்த கலைஞர், அன்றைய காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில்  விமர்சிக்கும் போது காவல்துறையினரின் ஈரல் முக்கால்வாசி அழுகி விட்டது என்று கூறினார். ஆனால், கடலூர் மாவட்ட நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது காவல்துறையினரின் ஈரல் மட்டுமல்ல.... இதயம், மூளை ஆகியவையும் முழுமையாக அழுகி விட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் சட்டத்திற்கு ஒவ்வாத இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தை காவல்துறை செய்திருக்காது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை அறுப்போம் என்று கொக்கரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க துப்பற்ற காவல்துறை, எந்தத் தவறும் செய்யாத பா.ம.க. மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கொடுமைப்படுத்துகிறது. இது அடக்குமுறையின் உச்சமாகும்.

கடலூர் மாவட்டத்தில் வன்னிய மக்கள் மீது இப்படி ஒரு வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல கோவையில் செந்தில் பாலாஜியின் ‘கம்பேக்’கை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், காவல்துறையினரின் செயல்பாடுகளையும் வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது களப்பிரர்கள் ஆட்சியின் நீட்சியாகவே தோன்றுகிறது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் எதிர்கொள்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு எனது திண்டிவனம் வீட்டில் காவல்படைகளை குவித்து எனது வீட்டை சோதனை செய்ததாக செய்தி பரப்பியது, பு.தா. அருள்மொழி உள்ளிட்ட பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது, விழுப்புரத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் நடத்திய பேரணியில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது, கடலூர் புதுச்சத்திரத்தில் இராஜேந்திரன் என்ற தொண்டரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது உள்ளிட்ட ஏராளமான அடக்குமுறைகளை 1989-ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கட்டவிழ்த்து விட்டார். அன்று தந்தை செய்ததை இன்று தனயன் செய்கிறார். அவ்வளவு தான்.” என்று இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தொல்.திருமாவளவன்

மஞ்சக்கொல்லை சாதிவெறியாட்டம் :
சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- திருமாவளவன்

”கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென த.வா.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று மஞ்சக்கொல்லை சிறுத்தைகள் இரு சமூகங்களுக்கான நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பெரிதுபடுத்த வில்லை. ஆனால், அடுத்து 15.10.2024 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தெடுத்துக் கொண்டு போய்விட்டனர். அது குறித்தும் விசிக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவானது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், 01.11.2024 அன்று மஞ்சக்கொல்லை அருகேயுள்ள உடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பையொட்டி மஞ்சக்கொல்லை கிராமத்தைச்சார்ந்த முத்துக்குமார், அரி உள்ளிட்ட பத்துபேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை உடையூர் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், அவர்களிடம் 'ஊரைத் தாண்டிப்போய் குடியுங்கள்' என்று சொல்லியுள்ளனர். அது வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது உடையூர் தலித் இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். அதனைக் கவனித்த உடையூர் தலித் மக்கள் ஓடிவந்து அவர்களைத் தடுத்துள்ளனர்.

போதையிலிருந்த அவர்களில் மஞ்சக்கொல்லையைச் சார்ந்த செல்லத்துரை என்பவரைத் தவிர மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தனியே சிக்கிக்கொண்ட அவரைத் தலித் இளைஞர்கள் சிலர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். இதனையொட்டி தலித் இளைஞர்கள் ஐந்து பேரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். எனினும், அத்தாக்குதலைக் கண்டித்து மஞ்சக்கொல்லையைச் சார்ந்த வன்னியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பாமகவும் வன்னியர் சங்கமும் தலையிட்டு இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர். 

 "திருமாவளவன் மூன்று முறை இங்கே எப்படி ஜெயிக்கிறான்? என்றும் "அவன் இவன்" என்றும் பாமக மாவட்ட செயலாளர் பேசி, தமது கட்சியினரின் சாதி உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அவர் பேசிய பின்னர் தான், ஒரு பெண்மணி கடப்பாரையால் விசிக கொடிக் கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்திருக்கிறார்.

இது தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பாக, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவேதான், புவனகிரியில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஓரிருவர் பாமக'வினரைப் போலவே வெறுப்பு அரசியலுக்கு இரையாகும் வகையில் பேசியது ஏற்புடையதில்லை. அது வன்மையான கண்டனத்துக்குரியது. 

அவ்வாறு பேசியதற்காக சிறுத்தைகளின் மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்து, 'செல்வி முருகன்' என்பவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். 

ஆனால், விசிக' வின் கொடியை அறுத்தது; பின்னர் கொடிக் கம்பத்தை அறுத்தது; அதன் பிறகு கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்தது; உடையூரில் தலித் இளைஞர்களைத் தாக்கியது; மஞ்சக்கொல்லையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் பேசியது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாத காவல்துறை தான், விசிகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. 

வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமக'வினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்னும் பெயரில், இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு துணை போய்விடக்கூடாது. 

சட்டம் - ஒழுங்கு என்னும் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. விசிக கொடியை அறுத்தது , கம்பத்தை வெட்டியது, பீடத்தை உடைக்க முயற்சித்தது, தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றில் தொடர்புடைய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சார்ந்த அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்று திருமாவளவன் கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram