ராஜிவ் காந்தி - காமராஜர் 
தமிழ் நாடு

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு… வலுத்த எதிர்ப்பு… மன்னிப்புக் கேட்ட ராஜிவ் காந்தி

Staff Writer

"பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை!" என திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

'காமராஜர் சொந்த காசிலா பள்ளிக்கூடங்களை திறந்தார். பெரியார் அறிவுறுத்தி தான் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார்' என்று அன்பகத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ராஜிவ் காந்தி பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு தமிழக காங்கிர தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தமிழிசை உட்பட பலர் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், தன்னுடைய பேச்சுக்கு ராஜிவ் காந்தி மன்னிப்புக்கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பத்தில்:

“மனதார வருந்துகிறேன்!

சில தினங்களுக்கு முன்பு “கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்த நான் பேசியது காங்கிரஸ் பேரியக்க தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது!!

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தினை தெரிவித்தார்கள்!!

பெருந்தலைவர் காமராஜரை சிறுமைபடுத்தவோ,குறைத்து பேசவோ தனிப்பட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை!

பெருந்தலைவர் காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து.

என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விசம பிரச்சாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுகவும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது.

நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பெரும் தலைவர் காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் பேசிய வீடியோவின் லிங்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.