மழை 
தமிழ் நாடு

மழை... தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Staff Writer

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது. ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 19ஆ ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இதனால் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 33 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram