வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 30 இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் சென்றதன்படி, வருமான வரித் துறையினர் நேற்று அவருக்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், அவரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 30 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்தனர்.
மொத்தம் 15 கல்வி நிறுவனங்களும், 4 நட்சத்திர ஓட்டல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினா்.
இந்த சோதனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்குத் தொடர்புடைய 30 இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை நாளையும் தொடர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னர்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள், பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.