பேராசிரியர் ராஜ் கௌதமன் (74 வயது) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
எஸ்.புஷ்பராஜ் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ் கெளதமன் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ், சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் தமிழ் பேராசிரியராக பணியாற்றி கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் என பலதளங்களிலும் அளப்பறிய ஆய்வுகளை மேற்கொண்டவர் பேராசிரியர் ராஜ் கெளதமன். இவர் எழுத்தாளர் பாமாவின் அண்ணன்.
க.அயோத்திதாசர் ஆய்வுகள், தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என 14 ஆய்வு நூல்களையும், பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய ஆய்வு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
மேலும், சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் என்ற மூன்று நாவல்களையும் ஒரு சிறுகதை தொகுப்பையும் எழுதியுள்ள ராஜ் கெளதமன் 9 புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார்.
விளக்கு விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது, வானம் இலக்கிய விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் ஆய்வுலகில் அவரின் பங்களிப்பு அளப்பரியது என்பதால், ஆய்வாளர்கள், பேராசியர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரித்து வருகிறனர்.