பிரேமலாதா விஜயகாந்த் 
தமிழ் நாடு

சீமான் திடீரென அம்பியாக மாறுவார் திடீரென அந்நியனாக மாறுவார்! – பிரேமலதா விமர்சனம்

Staff Writer

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அம்பியாகவும், திடீர் என்று அந்நியனாகவும் மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:

அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். வருங்காலம் நிறைய உள்ளது.

அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முன் எடுத்து செல்லும் நிகழ்வுகள் குறித்தே எதையும் கூறமுடியும்.” என்று கூறிய பிரேமலதாவிடம், மாநாட்டுக்கு முன்பு வரை விஜய்யை தம்பி என அழைத்த சீமான், இப்போது கடுமையாக விமர்சிக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா “சீமான் திடீர் என்று அந்நியனாக மாறுவார், திடீர் என்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது.

ஏன் விஜய்யை தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு இறப்பார் என்று சொன்னார் என்று சீமான் தான் பதில் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கார். அதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.

தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் என்பது குறித்த கேள்விக்கு, அதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிடலாம். எங்களுடைய கட்சிதான் அதற்கான பதில். கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதனை முற்போக்கு சிந்தனையுடன் கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்.

புரட்சிக் கலைஞர் கேப்டனைவிட இங்கு தமிழை நேசித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழை மிகப்பெரிய அளவில் நேசித்தவர் கேப்டன் என்பது எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். எத்தனையோ திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தைப் படைத்தவர் கேப்டன்.

அதேபோல, எல்லா விஷயங்களிலும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று அனைத்து இடங்களிலும் பேசியவர் அவர். தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மாற்று மொழியையும் பேசாதவர். அதனால், அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம் என்றுதான் இளைஞர்களிடம் கேப்டன் கூறினார்.

எனவே, நிச்சயமாக தமிழ்தான் நமக்கெல்லாம் அன்னை, தெய்வம் எல்லாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது இன்று நேற்று அல்ல. நூற்றாண்டு காலமாக இருக்கக்கூடிய விஷயம். எனவே, இப்போது அதற்கு புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram