டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறுவது கிறுக்குத்தனமான செயல் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் அரங்கேறக் கூடாது என்பதற்காக தண்டனைகளை அதிகப்படுத்தி மதுவிலக்கு திருத்த மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில் இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று கட்சியின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:
"சட்டசபையில் துரைமுருகன் பேச்சு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. "டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்டசபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குரியது.
டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம்.
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல.
எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது." என்று பிரேமலதா கூறினார்.