தமிழ் நாடு

பொன்முடி தீர்ப்பு: ராமதாஸ் மகிழ்ச்சி, எடப்பாடி- அண்ணாமலை ஆருடம்!

Staff Writer

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

இப்போது ஒரு சில அமைச்சர்கள் கைதாகி உள்ளே சென்றுள்ளனர். இன்னும் நிறைய அமைச்சர்கள் உள்ளே போக உள்ளனர். தி.மு.க. அரசில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட அரசு என்றால் இந்தியாவிலேயே அது திமுக அரசு மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரியும். திமுக அரசு சாதனை செய்தது ஊழலில் மட்டும்தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன் இதுதான் அவர்களின் தாரக மந்திரம்.

ராமதாஸ்

வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொது வாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.-வின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

அண்ணாமலை

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.