சுங்கச்சாவடி 
தமிழ் நாடு

சுங்கச்சாவடி கட்டண உயர்வு- கட்சிகள் சொல்வது என்ன?

Staff Writer

சுங்கச்சாவடிகளின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பதாக பிரச்னை நீடித்துவரும் நிலையில், கட்டணத்தையும் வகைதொகையில்லாமல் உயர்த்திக்கொண்டே போவதா என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 

பா.ம.க. தலைவர் அன்புமணி:

“ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஊர்திகளைப் பொறுத்து 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப் படும்; ரூபாய் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம்  உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டுக்கான உயர்வு மிகவும் அதிகம் ஆகும். 2008&ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது  என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக  செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. சென்னை & திருச்சி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவது உறுதி. சென்னை & பெங்களூர் சாலையில் சென்னை முதல் வாலாஜா வரை பயணிப்பதற்குள் வாழ்நாள் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், புதிதாக  19 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.”

வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன்:

“  சுங்கக் கட்டண உயர்வு சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். இறுதியில் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள்தாம். ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை,எளிய மக்களை கசக்கிப் பிழியும் ஒன்றிய பாஜக அரசு சுங்கச்சாவடி கட்டணங்களில் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுங்கச்சாவடிகள் அமைப்பது அவற்றில் கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றை ‘தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 வரையறுத்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் சுங்கச்சாவடிகள் பல இந்த விதிகளுக்குப் புறம்பாக உள்ளன.

விதிமுறைக்குப் புறம்பான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என அளித்த உறுதிமொழியை ஒன்றிய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை கிராம சாலைகளை விட மோசமாக உள்ளது. சாலைகளைச் சரியாகப் பராமரிக்காத ஒன்றிய அரசுக்கு கட்டணம் வசூலிக்க எந்த உரிமையும் இல்லை.

இந்த சுங்கச்சாவடிகளில் பல பாஜகவுக்கு நெருக்கமான நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. ஒப்பந்தத்துக்கான நிபந்தனைகள் நிறைவடைந்த பிறகும்கூட பல சுங்கச்சாவடிகளில் தனியார் கட்டண வசூல் தொடர்கிறது. அதை ஒன்றிய அரசு தெரிந்தே அனுமதிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது இந்த சுங்கச்சாவடிகள் பாஜகவுக்கு நிதி வசூல் செய்வதற்கான மறைமுக ஏற்பாடோ என்ற ஐயம் எழுகிறது.

சாலை வசதியென்பது ஒரு அரசு குடிமக்களுக்கு செய்து தர வேண்டிய அத்தியாவசிய வசதியாகும்.

‘இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கக்கூடாது’ என மனிதநேயத்தோடு நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதிய ஒன்றிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும்.” 

த.வா.க. தலைவர் வேல்முருகன்:

”சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது, லாரி உரிமையாளர்களை மட்டும் பாதிக்கக்கூடிய பிரச்சினை அல்ல; சங்கிலித்தொடர்போல, வாகனப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் சகல துறைகளையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை. விலைவாசி உயர்வாக மக்களின் தலையில் விடியும் பிரச்சினை.

சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை என்பதும்; ஒப்பந்ததாரர்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பதும் ஏற்கனவே பலமுறை அம்பலமான ஒன்றுதான்.

தற்போது, சுங்கச்சாவடிகளை ஒப்பந்தம் எடுத்திருக்கும் பெருமுதலாளிகளின் இலாப விழுக்காடு குறைந்துவிடக் கூடாதென்பதற்காக, சட்டப்பூர்வமான வழிப்பறியைத் தொடர்வதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, தமிழ்நாட்டில் 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது, சுங்கச்சாவடிகள் குறித்து நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி அதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்  எ.வ.வேலு, ஒன்றிய அரசுடன் பேச்சு நடத்தி, தமிழ்நாட்டிலுள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று  சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு, புதிதாக 19 சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:

”சுங்கச் சாவடிகளை இரண்டாக பிரித்து கட்டணங்களை உயர்த்தி வருகின்றது. இது சாலை வழியாக பயணம் செய்வோர் மீது நடத்தப்படும் சட்டபூர்வ பகல் கொள்ளையாகும்.

தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டுதல், இயக்குதல், திரும்ப ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் இன்னும் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. பல ஊர்களுக்கான சேவை சாலைகள் போடப்படவில்லை. இந்த நிலையில் முன்னர் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளன. பழுது பார்த்தல் என்ற பெயரில் வழிமாற்றம் செய்யப்பட்டு, சாலை வழிப் பயணிகள் பல மாதங்களாக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் எரிபொருள் செலவும், வாகன தேய்மான செலவும் அதிகரிக்கின்றன. பாஸ்டேக் - முறையில் முன் பணம் கட்டாதவர்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பது பொருளாதார பயங்கரவாதத் தாக்குதலாகும். இது, சில்லறை வியாபாரத்துக்கும், மொத்தக் கொள்முதல் வணிகத்திலும் நடைபெறும் பொருள் போக்குவரத்து வாகனங்கள் பெரும் தொகை கட்டணமாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram