மருத்துவர் அன்புமணி 
தமிழ் நாடு

காவிரி- அக்.4இல் கடையடைப்புப் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு!

Staff Writer

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 4ஆம் நாள் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலைவாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியமும், தாமதமும் செய்கிறது.” என கண்டனம் தெரிவித்துள்ளார்.


”தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52% நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48% நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.” என்று விவரித்துள்ள அன்புமணி, 

”தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி -காவிரி உபரி நீர் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைக்கமுடியும். மன்னர்கள் காலத்திலிருந்து ஏரிகளுக்கு இடையே நீர் கொண்டுசெல்ல அமைக்கப்பட்ட பாதையில் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியும்.

தருமபுரி -காவிரி குடிநீர் திட்டத்திற்கு ஆண்டுக்கு 3 டி.எம்.சி மட்டுமே நீர் தேவைப்படும். ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக பல நூறு டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலையில், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் இந்தத் திட்டத்தால், ஒரு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டம் வளம் பெறும்.

தருமபுரி மக்களவை உறுப்பினராக 2014ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்தத் திட்டத்தை நான் தயாரித்தேன். இதைச் செயல்படுத்தக் கோரி 19.09.2018 தொடங்கி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, அவற்றை 05.03.2019இல் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினேன். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் இத்திட்டம் குறித்து பலமுறை வலியுறுத்தினேன். ஆனால், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.” என்று அன்புமணி தன் அறிக்கையில் ஆதங்கப்பட்டுள்ளார்.