தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ள கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட விஜயகாந்துக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. அப்போது தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, வீடியோ மூலம் விஜயகாந்த் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
நடிகர்கள் சூர்யா, மசூர் அலிகான் போன்றவர்கள் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பப் பிரார்த்திப்பதாக ட்வீட் செய்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்க, கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனமும் செய்யப்பட்டார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜயகாந்த்தைப் பார்த்த தொண்டர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதற்கு காரணம், மேடைக்கு வந்த விஜயகாந்த் ரோலிங் சேரில், மாஸ்க் அணிந்தபடி வந்தார். அவரால் தன்னிச்சையாக இயங்க முடியாததைக் கண்டு பலரும் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில், மெரினா, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பாண்டிராஜ் விஜயகாந்த் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் போட்ட பதிவு வைரலாகி உள்ளது.
“கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘இப்படிப் பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.