என்.எல்.சி.யில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டமிட்டு வருவதாக என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுரங்க இயந்திரங்கள் உற்பத்திக்கான ‘மேக் இன்இந்தியா’ முயற்சிகள் குறித்த நிறுவன பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய நிலக்கரித் துறைசெயலர் அம்ரித்லால் மீனா பேசுகையில், ”என்.எல்.சி. இந்தியா நிறுவனம், அதன் தலைவர் பிரசன்னகுமார் தலைமையில் சீரிய செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் பங்கு விலையும் உயர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்கிடையே அணு மின்சக்தியிலும் அந்நிறுவனம் கால் பதிக்கவுள்ளது.” என்று பேசினார்.
இதுதொடர்பாக என்.எல்.சி. இந்தியா நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் கேட்டபோது, “என்.எல்.சி. நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத மின்னுற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.ஏற்கெனவே 1500 மெகாவாட் சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்து வருகிறோம். இந்த நிலையில் சிறியஅளவிலான அணு மின்சக்தி நிலையம் அமைப்பது தொடர்பாக, அணுமின்சக்தித் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களிடமும், இந்திய அணு சக்தி ஆராய்ச்சி நிறுவனங்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
என்.எல்.சி.யில் சிறிய அளவிலான அணு உலைகள் அமைக்க இருப்பதாக வெளியான தகவல் அப்பகுதி மக்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.