பயனளிக்குமா பாதயாத்திரை? 
தமிழ் நாடு

‘இது பெரியார் மண். உங்க நடை பயணம் எடுபடுமா?' என்ற கேள்விக்கு….அண்ணாமலை விட்ட சவால்!

Staff Writer

என் மண், என் மக்கள் நடை பயணத்தின் 6வது நாளான இன்று புதுக்கோட்டையில் திருமயத்தில் அண்ணாமலை தனது நடை பயணத்தை தொடங்கினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,“ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் ரகுபதி. அவர் தற்போது ஊழல் தடுப்புத்துறை அமைச்சராக உள்ளார். இதைவிட வெட்கக்கேடான விஷயங்களை பார்க்க முடியுமா?. சிறையில் இருந்தவர்களை சிறைத்துறை அமைச்சராக வைத்திருக்கிறோம்.

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இது தான் திமுகவின் ஆட்சி. 2வது சாதனை குடிக்காரர்கள் அதிக உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறார்கள்.

டாஸ்மாக் அமைச்சர் சொல்கிறார், ‘என் நண்பர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் டென்ஷன் ஆகிடுவேன் ' எனக் கூறுகிறார். தமிழக அரசுக்கு வருமானம் கொடுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிறார்.

இன்னைக்கு தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து பேசும் கட்சி பாஜக. அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் கட்சி பாஜக. இந்தியாவிலேயே ஊழல் அதிகமாக செய்யும் கட்சி திமுக.

அமலாக்கத்துறை, சிபிஐ தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்புகள். எல்லா அமைப்புக்கும் மேலாக நீதிமன்றம் இருக்கிறது. அது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.” என்றார்.

இது பெரியார் மண் அண்ணாமலையின் நடைபயணம் எடுபடாது என்று சொல்கிறார்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘பார்ப்போம். 234 தொகுதிகள் இருக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி வரை பயணம் செய்கிறேன். எடுபடுமா? எடுபடாதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.