தமிழக மீனவர்கள்  
தமிழ் நாடு

தமிழக மீனவர்களை மொட்டையடித்து அட்டூழியம்- 20ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு!

Staff Writer

இராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை அரசு மொட்டையடித்தும் அந்நாட்டுக் கைதிகளின் சிறைக் கழிப்பிடங்களை சுத்தம்செய்யவைத்தும் அட்டூழியம் செய்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. வரும் 20ஆம் தேதி சிபிஎம் கட்சியின் சார்பில் இராமேசுவரத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பா.ம.க.  நிறுவனர் இராமதாசு இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இராமேசுவரத்திலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு, பின்னர் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்  5 பேரை சிங்கள அரசு மொட்டையடித்தும், கைவிலங்கிட்டும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கழிவறைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளது. சிங்கள அரசின் இந்த மனிதத் தன்மையற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட  8 மீனவர்களில் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேரும் தலா ரூ.50 ஆயிரம் தண்டத்துடன் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் அவர்களின் குடும்பத்தினர் கடந்த 7-ஆம் தேதி தண்டத் தொகையை கட்டியுள்ளனர். ஆனால், கடந்த 6-ஆம் தேதியே தண்டம் செலுத்தவில்லை என்று கூறி தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு இந்தக் கொடுமையையும் அவமதிப்பையும் இழைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது.” என்றும் இராமதாசு கூறியுள்ளார். 

”மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் வேறு ஏதேனும் நாடுகளில் இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்பு நிகழ்த்தப்பட்டிருந்தால் இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா?” என்றும் அவர் கேட்டுள்ளார். 

கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்

அநாகரிகத்தின் எல்லைக்குச் சென்ற இலங்கை

”தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜகப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.” என்று அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

”தமிழ்நாட்டு மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகளைச் சுற்றிவளைத்து அச்சுறுத்துவது, நாட்டுப் படகுகளையும்கூட கைப்பற்றி வழக்குப் போடுவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, நடுக்கடலில் மோதலுக்கு முயல்வது என பல வகையான முயற்சிகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது செய்துவருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து நூற்றைம்பது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து கப்பல் மோதலில் ஒரு மீனவர் பலியாகியுள்ளார்.

இவ்வாறான சமயங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உரிய எச்சரிக்கை, கண்டனக் குரல்கள் எழ வேண்டுமென பலமுறை வற்புறுத்தியுள்ளோம். ஆனால், மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை, மீனவர்களின் பிரச்சனையை புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. ராஜதந்திர அடிப்படையிலான தலையீடுகள் இல்லாததால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதும், பொருட் சேதத்திற்கு ஆளாவதும் தொடர்கதையாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் கைது செய்த தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோரின் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இலங்கை அரசையும்,  தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வரும் 20ஆம் தேதி இராமேசுவரத்தில், சி.பி.ஐ(எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.” என்று பாலகிருஷ்ணனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram