வேங்கைவயல் கிராம மக்கள் 
தமிழ் நாடு

பரந்தூர், வேங்கைவயல்... பல மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!

Staff Writer

பரந்தூர், வேங்கைவயல், பொட்டலூரணி ஆகிய கிராமங்களில் பொதுக் கோரிக்கைகளுக்காக மக்கள் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்

பரந்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்திருந்தனர். காஞ்சிபுர மாவட்ட நிர்வாகமும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 1400 வாக்களர்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அருகில் உள்ள நாகப்பட்டு கிராமத்தினரும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

வேங்கை வயல் கிராமம்

வேங்கைவயல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாயில் கருப்புத் துணி கட்டி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என அவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இப்பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் இதுவரை இரு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் வாக்குச்சாவடி பணியாளர். மற்றொருவர் முத்துக்காடு பகுதியிலிருந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்.

பொட்டலூராணி கிராமத்தில் கறுப்புக் கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு

பொட்டலூராணி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூராணி கிராமத்தைச் சுற்றிய 3 தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைகள் மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை.

இதனால், இப்பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்தில் வீடுகள், பல்வேறு பகுதிகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யாததைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி, என். புதுப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதைப்போல, கடலூர் மாவட்டம் அருகே உள்ள எஸ்.ஏரிபாளையம், குமுடி சோடகன், விருத்தகிரி குப்பம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைப்பதில்லை என்று தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்; அங்குள்ள வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.