எடப்பாடி பழனிசாமி, சவுக்கு சங்கர் 
தமிழ் நாடு

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா?... நீதிபதி விசாரிக்க பழனிசாமி வலியுறுத்தல்!

Staff Writer

சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் கடுமையாக தக்கப்பட்டுள்ளதாகவும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது.

”சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கர் சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல தி.மு.க.வினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்று பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் சவுக்கு சங்கரை சிறையில் சென்று பார்த்த பிறகு அளித்த பேட்டியில், ”இந்த வழக்கு சம்பந்தமாக சந்திப்பதற்காக சவுக்கு சங்கரை சிறையில் சென்று பார்த்த போது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் எடுக்கப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள கூறுகின்றனர். ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.