அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று இதற்கான ஆணையைப் பிறப்பித்தார்.
கடந்த 2006 -2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, தன் வருமானத்துக்கும் கூடுதலாக ரூ.76, 40,433 சொத்து சேர்த்தார் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அவர், அவரின் மனைவி மணிமேகலை மீது வழக்கு தொடுத்தது.
திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இவ்வழக்கில், இந்த முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2022 ஆம் ஆண்டில் இருவரையும் விடுவித்து உத்தரவிடப்பட்டது.
இதைப்போலவே, அப்போதைய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரின் மனைவி ஆதிலட்சுமி உட்பட்டோர் மீதான ரூ.44, 56, 067 சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சரும் அவரின் மனைவியும் கடந்த ஆண்டு ஜூலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். கடந்த மார்ச்சில் இறுதி விசாரணைக்குப் பிறகு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இன்று காலையில் இரு வழக்குகளையும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க அவர் உத்தரவிட்டார். இதில் செப்டம்பர் 1ஆம் தேதி இரு அமைச்சர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.