தமிழகத்தில் இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்கள் என 11 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): காக்காச்சி, நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 100, மாஞ்சோலை (திருநெல்வேலி) 90, ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) 50.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதியில் இன்றும் நாளையும் (ஜனவரி 7, 8) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.