அணுக் கனிம சுரங்கம் நன்றி: பூவுலகின் நண்பர்கள்
தமிழ் நாடு

ஏற்கெனவே மூளைவளர்ச்சி பாதிப்பு... புதிதாக அணுக் கனிம சுரங்கம் அமைப்பதா?

Staff Writer

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயல்வதாகவும் நாசகாரத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்:  

”கேரளா வயநாடு பேரிடர் நிகழ்வு. இந்த பேரிடர் நிகழ்வில் இருந்து, குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என 100க்கும் மேற்பட்ட உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இந்த துயர நிகழ்வில் இருந்து படிப்பினையை கற்றுக் கொள்ளாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், அணுக்கனிம சுரங்களை அமைப்பதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் நாசக்காரத் திட்டத்தால், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாதிப்புக்க்குள்ளாகும் என்ற பேராபத்தை புரிந்துகொள்ளாமல், அதற்கான கருத்து கேட்புக் கூட்டத்திற்கான தினத்தையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அதாவது, இந்திய அணு சக்தித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த 1144.0618 எக்டர் பரப்பிலான பகுதிகளில் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் இசைவையும், ஒன்றிய சுரங்க அமைச்சக அனுமதியினையும் பெற்றுள்ளது.
இதன் மூலம், கிள்ளியூர் தாலுகாவில்  உள்ள கீழ்மிடலாம், மிடாலம், இனயம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லன்கோடு ஆகிய பகுதிகளில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

அகழ்விக்கக்கூடிய கனிம படிமத்தில், அணுக் கனிமங்களின் அளவு 10 முதல் 22 விழுக்காடு வரை உள்ளது. இதனடிப்படையில், புதிய சுரங்க குத்தகை மூலம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டன்கள் என்ற விதத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மணவாளக்குறிச்சி ஆலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்படும் என ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் அமையவிருக்கும் இடம் இயற்கையாகவே அதிக கதிரியக்கதன்மையுடைய பகுதிகளாகும். இந்த நிலையில் அணுக் கனிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டால், அணுக்கதிரியிக்க பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும்.


ஏற்கெனவே, கன்னியாகுமரி, திருநெல்வேலி,ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உட்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


கூத்தன்குழி, மனவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம்பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

கடலோரங்களில் இருந்த மணற்குன்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கடற்கரையின் வளம் அழிக்கப்பட்டால் அது ஆழமற்ற கடல்பகுதியின் வளத்தையும் அழித்துவிடும். இந்த நிலையில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால் பாதிப்புகள் இன்னும் பன்மடங்கு உயரக் கூடும்.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் தாது மணல் உட்பட்ட அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.”

பூவுலகின் நண்பர்கள் இயக்கம்:

” தமிழக கடலோரப் பகுதிகளில் தாது மணல் உள்ளிட்ட அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும். 

தென் மாவட்டங்களில் ஐ.ஆர்.இ.எல். ஆலை செயல்பாடுகள் மற்றும் தாதுமணல் கொள்ளை நடந்த இடங்களில் பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய விரிவான மருத்துவ ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளை விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

இந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எவ்வித அணுக் கனிம சுரங்கங்களையும் திறக்கக்கூடாது.

அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும்போது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். இதையும் தாண்டி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளும் இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.”

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram