தமிழ்நாட்டில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 544 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் பட்டாசு வெடிப்பில் சிக்கி, முகத்திலும் உடலின் பல பாகங்களிலும் படுகாயம் அடைந்தான். மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான்.
மாநில அளவில் மொத்தம் 150 வெடிப்பு தீக்காயச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டு 103 தீ விபத்துகள் பதிவான நிலையில், இந்த ஆண்டில் 48 விபத்துகளே பதிவாகியுள்ளன.
அரசின் விவரப்படி, இரண்டு ஆண்டுகளில் பட்டாசு தீ விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரிபாதியைவிடக் குறைந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் 336 விபத்துகளும் சென்ற ஆண்டில் 254 விபத்துகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதுவே, காயமடைந்தோர் முறையே 1,317 ஆகவும் 794 ஆகவும் பதிவாகியுள்ளது.