தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனைக் கொலைசெய்து விடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைத் தொடர்புபடுத்தி வாட்சாப் உரையாடல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலானது. அதைத் தொடர்ந்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்; நாகை திருவள்ளுவனுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என பல தமிழின அமைப்புகளின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியனும் இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவிய அந்த உரையாடல் ஒலிப்பதிவு போலியானது என்றும் இதன் பின்னணியில் தி.மு.க. ஆதரவாளர்கள் உள்ளனர் என்றும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நா.த.க.வினர் இன்று புகார் மனு அளித்தனர்.
அதில், “உண்மையில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில் வேண்டுமென்று போலியான உரையாடல்களை தயாரித்துக் காட்டி நாம் தமிழர் கட்சியை பற்றியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றியும் பொதுமக்களிடமும் தவறான எண்ணமும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிட்டுள்ளார்கள்.
இது மட்டுமல்லாமல் சில இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சில நபர்களும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில நபர்களும் மற்றும் பல சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கும் பல நபர்களும் உள்நோக்கத்தோடு நாம் தமிழர் கட்சிக்கு அவர் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும் இது போன்ற கருத்துக்களை, சமூக ஊடகங்களிலும், ஊடகவியலாளர் சந்திப்புகளிலும், உருவாக்கியும் பகிர்ந்தும் வெளியிட்டும் வருகின்றனர்.
குறிப்பாக, தி.மு.க. ஆதரவாளர்களும் அதைச் சார்ந்த சமூக ஊடகக் கணக்காளர்களும், தி.மு.க. சார்பு ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நோக்கத்தோடும் அவதூறு கட்டமைக்கும் நோக்கத்தோடும் பொய்யான கொடூர அவதூறு செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.
இதுபோன்ற குரூரமான அவதூறான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதால் சமூக பதற்றமும், இரு தரப்பிற்கு இடையே மோதலும், வாக்குவாதங்களும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், திட்டமிட்டு குரூரமான பொய்யான அவதூறு செய்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இது தொடர்பான காணொலிகளையும் செய்திகளையும் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும் நா.த.க. மத்திய சென்னை மண்டலச் செயலாளர் இரா.சிறீதர் அம்மனுவில் கூறியுள்ளார்.