திருப்பதி லட்டு  
தமிழ் நாடு

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் இல்லை- சென்னை கிங் ஆய்வகம்

Staff Writer

திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு அனுப்பப்பட்ட திண்டுக்கல் நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் இல்லை என்று சென்னை கிங் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஆந்திராவை மட்டுமல்ல நாடு முழுவதையுமே ஒரு கலக்கு கலக்கிவிட்டது, திருப்பதி லட்டு விவகாரம்.

குறிப்பாக, லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு உட்பட பல பொருட்கள் இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவே குற்றம்சாட்டியிருந்தார். அதையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனும் விளக்கம் ஒன்றை அளித்தார்.

விவகாரம், உச்சநீதிமன்றம்வரை போனது. சந்திரபாபுவை உச்சநீதிமன்றம் கண்டிக்கவும் செய்தது.

இந்த நிலையில், மைய அரசின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பில், திண்டுக்கல் ஏஆர் பால்பண்ணை நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கலப்படம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த நிறுவனம் வழக்கு தொடுத்தது. அதில், சென்னை, கிண்டியில் உள்ள மைய அரசின் கிங் ஆய்வக நிறுவனத்தின் சோதனையில் தங்கள் நெய்யில் கலப்படம் இல்லை எனச் சான்று வழங்கப்பட்டுள்ளதை அவர்கள் தரப்பு தெரிவித்தது.

அதைப் பதிந்துகொண்ட நீதிபதிகள் மைய அரசுக்கு இதுகுறித்து கேள்விகள் எழுப்பினர்.

குஜராத் நிறுவனத்தின் ஆய்வுச் சான்றின்படி விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில், மைய அரசின் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைப்படி ஏன் விளக்கம் கேட்கவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.

புதிதாக 14 நாள்கள் அவகாசம் அளித்து நோட்டீஸ் வழங்கலாம் என்றும் திண்டுக்கல் நிறுவனம் உரிய முறைப்படி அதை அணுகலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.