தமிழ்நாட்டில் இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் ஆகிய மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட 7 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லாரி உரிமையாளர்கள் அமைப்புகள் உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப்பெறுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.