பெரியார் நூலகம்- அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் 
தமிழ் நாடு

36,000 பேருக்கு வேலை தரும் புது ஐ.டி. வளாகம்...கோவையில்!

Staff Writer

கோயம்புத்தூரில் 36 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில் பெரும் தகவல்தொழில்நுட்ப வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. கோவையில் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இதைத் தெரிவித்தார்.

” நாடாளுமன்றத் தேர்தலின்போது, ’கோவை ரைசிங்’ என்று கோவைக்கான வாக்குறுதிகளை சொன்னோம்! அதில் பல்வேறு வாக்குறுதிகளின் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது, கிரிக்கெட் ஸ்டேடியம்! தேர்தல் முடிவுகள் வந்த பத்து நாள்களுக்குள் அதற்கான நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. விரைந்து அந்தப் பணிகளும் தொடங்கயிருக்கிறது.” என்றும்,

”கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் உருவெடுத்திருக்கிறது. இதனால் பல நிறுவனங்களுக்கு அலுவலகங்களுக்கான இடத்தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, தற்போதுள்ள டைடல் பார்க் அருகிலேயே, எல்கோசிஸ் பகுதியில் உள்ள 17.17 ஏக்கர் பரப்பளவில், மேலும் ஒரு பெரும் தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

”கருணாநிதி ஆட்சியில் சென்னையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட இராமானுஜம் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப் போன்றே, கோவையில், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 36,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், மூன்று மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்தத் தகவல் தொழில்நுட்ப வளாகம், கோயம்புத்தூர் மாநகரத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக நிச்சயம் அமையும்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram