பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத்தை பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டித்துள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, 'லட்டு பாவங்கள்' என்ற வீடியோவை தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் வெளியிட்டது.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்த்து ரசித்தனர். ஆனால், வீடியோ சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்துக்களின் உணர்வுகளை வைத்து இப்படி வீடியோ பதிவிடலாமா என்று பலரும் பரிதாபங்கள் சேனலை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தார்கள். கடும் எதிர்ப்பை தொடர்ந்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோ நீக்கி உள்ளது. மேலும் நீக்கப்பட்டது குறித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பரிதாபங்கள் சேனல் விளக்கமும் அளித்திருந்தது.
இந்த விளக்கத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ’பாஜக படைப்பாளிகள் பக்கம் நிற்கும். அற்ப அரசியல் லாபங்களுக்காக அவர்களை பயன்படுத்தாது. இந்த தவறுக்காக அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். பரிதாபங்கள் குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று பாஜகவின் சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவராக கார்த்திக் கோபிநாத் பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது:
“பாஜக அவர்களுக்கு துணை நிற்குமா? கடவுள் பாலாஜி மற்றும் பிராமண சமூகத்தை இழுவுப்படுத்துவதே அவர்களின் ஒரே நோக்கம். நகைச்சுவை என்ற பெயரில், முதலாளியின் விருப்பப்படி சனாதன தர்மத்தை அழிக்க முயல்கிறார்கள். நீங்கள் எந்த அதிகாரத்தின் பேரில் அவர்களுக்கு நீங்கள் உறுதியளிக்கிறீர்கள் என்று புரியவில்லை. இது அருவருப்பானது” என்று பதிவிட்டுள்ளார்.