மாதிரிப் படம் 
தமிழ் நாடு

வடகிழக்குப் பருவ மழை: 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது!

Staff Writer

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை இயல்பை விட 15 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீர்வளத் துறையின் மூலம் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு மாதந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நடத்திய ஆய்வில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, ஆலந்தூரில் உள்ள புதுத்தெருவில் ௦.97 மீட்டர், வேளச்சேரி - ராஜலட்சுமி நகரில் ௦.5 மீட்டர், மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் ௦.7,மீட்டர், பள்ளிக்கரணையில் உள்ள ஐ.ஐ.டி காலணியில் ௦.4 மீட்டர் அளவுக்கு தரையிலிருந்து நிலத்தடி நீர் மட்டம் உள்ளது என்று சென்னைக் குடிநீர் வாரிய ஆய்வுத் தரவுகள் காட்டுகின்றன.