பிரதமர் மோடி இன்றைய தமிழகப் பிரச்சாரத்தில் தி.மு.க. மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தினார். மைய அரசு ஒதுக்கும் நிதியில்கூட ஊழல் செய்வதாகவும் அவர் குறிபிட்டார். அவரின் பேச்சுக்குப் பதிலடியாக தேனியில் இன்று மாலையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினும் காட்டமாகவே சாடினார்.
நாட்டில் ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைத்தால் அதற்குத் துணைவேந்தராக பிரதமர் மோடியைப் போடலாம் என்றார் அவர்.
மு.க.ஸ்டாலினின் உரையிலிருந்து...
“ இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டிற்குள் டூர் அடிக்கிறார்! அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை! அவரே ’ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்! நேற்று சென்னையில் எந்த இடத்தில் ஷோ காட்டினார்? தியாகராயர் நகர்! பிரதமர் அவர்களே! அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் – சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா?
உங்கள் ஷோ - ஃபிளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார்! சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம். மோடி அவர்களே… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… அந்தத் திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தான்! சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020-இல் ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை! நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை! மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை! இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய்! இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி! ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப்பொய் பேசுகிறார்.
சென்னையில் ஷோ காட்டிய மோடி அவர்கள், காலையில் வேலூர் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது! பலருக்கு என்ன சந்தேகம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான்! இதில், தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார்!
பிரதமர் மோடி அவர்களே… திராவிட மாடலில் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது! வளர்ந்து கொண்டிருக்கிறது! வளர்ந்து கொண்டே இருக்கும்! இதை எந்த மோடி மஸ்தான் வித்தைகளாலும் தடுக்க முடியாது! அதற்குப்பிறகு, வழக்கம்போல் குடும்ப அரசியல் – ஊழல் கட்சி என்று தேய்ந்துப் போன ரெக்கார்டையே போட்டார். இதற்கு நான் எத்தனையோ முறை விளக்கம் சொல்லிவிட்டேன். உண்மையாக, ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது! ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான்! தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும் - பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்ட உத்தமர்தான் மோடி! வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசலாமா?
அடுத்து, தமிழ்ப் பண்பாட்டிற்குத் தி.மு.க. எதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே! உங்கள் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டியில் படிக்கக் கூடாது, புத்தங்களை வாங்கி படிக்க வேண்டும்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” இதுதான் தமிழர் பண்பாடு! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இதுதான் தமிழர் பண்பாடு! பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? சாதியாலும் – மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் நீங்கள் தி.மு.க.வைக் குற்றம் சாட்டலாமா?
இப்போதும், சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்வது யார்? பத்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து கொண்டு, சாதனையாக எதையும் சொல்ல முடியாமல் இப்படி மக்களைப் பிளவுப்படுத்திப் பேசுகிறோம் என்று வெட்கப்பட வேண்டும் நீங்கள்! பத்தாண்டு காலம் ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வேதனைகளை நம்மால் மணிக்கணக்கில் பேச முடியும்!
”தமிழ்நாடு வேண்டாம்” என்று புறக்கணித்த மோடிக்கு - ஒரே முழக்கத்தில் நாம் சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி!” சொல்லுங்கள். ”வேண்டாம் மோடி”! இன்னும் சத்தமாக, “வேண்டாம் மோடி”! தெற்கிலிருந்து வரும் இந்தக் குரல், இந்தியா முழுவதும் கேட்கட்டும். தமிழ்நாட்டு வளர்ச்சியைத் தடுத்தால் - தமிழ்மொழியைப் புறக்கணித்தால் - தமிழ் பண்பாட்டுமேல் தாக்குதல் நடத்தினால் -தமிழ்நாட்டு மக்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி உங்கள் வாக்குகள் மூலம் நிரூபிக்க வேண்டும்!
அமைதியான இந்தியாதான் - வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் - இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழ்நாடு அதிகமாக வளம்பெறும். இங்கே திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து மூன்றாண்டு காலமாக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் குழந்தைகளைப் பள்ளி நோக்கி வர வைக்க வேண்டும் என்று மதிய உணவுத் திட்டத்தை ஆரம்பித்தார். பெற்றோர்கள் பலர் வேலைக்குச் செல்வதால் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பிடாமல் வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, உங்கள் ஸ்டாலின் தொடங்கியிருக்கும் திட்டம்தான் காலை உணவுத் திட்டம்.
16 இலட்சம் குழந்தைகள் பசியாறும் இந்த திட்டத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில் ஒரு பெற்றோர் சொல்கிறார்கள். “சாம்பாரில் நிறைய காய்கறிகள் போட்டு செய்கிறார்கள். இதனால் குழந்தைங்களுக்கு ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கிறது” என்று சந்தோஷப்பட்டுப் பேசுகிறார்கள்!
மற்றொரு தந்தை சொல்கிறார், “இப்போதெல்லாம் நாங்கள் வீட்டில் செய்தால்கூட குழந்தைகள் சாப்பிடுவது இல்லை. பள்ளியில் மிகவும் நன்றாக இருக்கிறது, அங்கு சென்று சாப்பிடுகிறேன் என்று சொல்கிறான். நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நன்றாகச் சாப்பிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் சுடச்சுட சாப்பாடு வந்துவிடுகிறது” என்று சொல்கிறார்.
இப்படி, ஏழை – எளிய - நடுத்தரக் குடும்பப் பெற்றோர்களின் கவலையைப் போக்கி, நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் அவர்கள் வகுப்பில் சோர்வில்லாமல் தெம்பாகப் பாடங்களைக் கவனிக்கவும் இந்தத் திட்டம் வழிவகுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதனால் எடை குறைவாக இருந்த மாணவர்களின் எடை அதிகரித்திருக்கிறது. மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது என்று ஆய்வு முடிவுகளும் வந்திருக்கிறது. இந்தப் புரட்சிக்கரத் திட்டத்தை, இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடான, அமரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய வளர்ந்த நாடான, கனடா நாட்டிலும் அறிமுகப்படுத்தப் போவதாக அந்த நாட்டுப் பிரதமர் அறிவித்திருக்கிறார்.
அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்று, பெண்களிடம் கருத்து கேட்கிறார்கள். அதில் ஒரு தாய்மார் சொல்கிறார், “ஸ்டாலின் அண்ணன் தரும் இந்த உரிமைத் தொகையில் எங்கள் வீட்டுக்கு மளிகைப் பொருள்கள் வாங்குகிறேன். உண்மையான தேவை இருக்கும் எல்லோருக்கும் இந்தத் தொகை சென்று சேருவதற்கு நானே சாட்சி” என்று சொன்னார். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிரும், எங்கள் ஸ்டாலின் அண்ணன் வழங்கும் தாய்வீட்டுச் சீர் என்று பாசத்துடன் உரிமையோடு இந்த திட்டத்தை கொண்டாடுகிறார்கள். உரிமைத் தொகையால் கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்து, உள்ளூர் சிறு வணிகர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது. இது சமூகப் புரட்சித் திட்டம் மட்டுமல்ல; பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது.
அடுத்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பேருந்தில், இலவசமாகப் பயணம் செய்கிறோம் என்று சொல்லும் விடியல் பயணம் திட்டம்!
வெளியூரில் வேலைக்கு செல்லும் மகளிர் பாதுகாப்பாக தங்குவதற்கு, ’தோழி விடுதி!
கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு, மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!
விரைவில், மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப் புதல்வன்”திட்டம்!
இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும், ”நான் முதல்வன்” திட்டம்!
ஒரு கோடிக்கும் அதிகமான பேர் பயனடைந்திருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்!
சாலை விபத்துகளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி இருக்கும் ”இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்”!
இப்படி ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நான் செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டேனா என்று கேட்டால், இல்லை! இன்னும் இன்னும் ஏராளமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு நமக்கு உடன்பாடான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மதிக்கும் ஒன்றிய அரசு அமைய வேண்டும்.
ஒன்றிய அரசின் கூட்டணியில் நாம் எப்போதெல்லாம் இருந்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இது தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க. ஒன்றிய அரசில் கூட்டணி சேர்ந்தால், சுயநலத்திற்காகப் பயன்படுத்தும். தி.மு.க. ஒன்றிய அரசில் இடம்பெற்றால், மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தும்.” என்று மு.க.ஸ்டாலின் தன் பேச்சில் கூறினார்.