ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி 
தமிழ் நாடு

கணேசமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்!

Staff Writer

ஈரோடு நாடாளுமன்ற மக்களவைத்தொகுதி உறுப்பினர் ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தி கோவையில் இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மேனாள் பொருளாளருமான கணேசமூர்த்தி (வயது 77) இன்று (28.3.2024) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
கல்லூரியில் படிக்கும் காலந்தொட்டு தி.மு.க. மாணவர் அணியில் தீவிரமாகப் பணியாற்றியவர்; ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணி வீரர்; தி.மு.க.வில் ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளராகத் திறம்படச் செயலாற்றியவர்.


ம.தி.மு.க. பிரிந்தபோது சகோதரர் வைகோவோடு இணைந்து பணியாற்றியவர். மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றியவர்; ஒரு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தவர். மதி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்தவர். ‘பொடா’ சட்டத்தின்கீழ் 19 மாத காலம் சிறைவாசம் கண்டவர்.

திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பல முறை பங்கேற்று கொள்கை முழக்கம் செய்தவர். அடக்கமும், பண்பும் கொண்ட பொது நலத் தொண்டர்; கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்டவர்.

அத்தகைய பெருமகனாரின் திடீர் மறைவு பெரும் வேதனைக்குரியது. அவர் பிரிவால் பெருந்துயரத்துக்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தாருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் சகோதரர் வைகோ அவர்களுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

பா.ம.க. நிறுவனர் இராமதாசு:

மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து  மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும்,  கணேசமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ.கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திமுகழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி திமுகழக வேட்பாளராக தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்த தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980 களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர்.

கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று திமுகழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி திமுகழகம் உருவாக்கியவர்களில் அ.கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்த போதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவை தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.

உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ.கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறி கொடுத்து விட்டது.

அ.கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள்

அ.கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

- இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான திரு.அ. கணேசமூர்த்தி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. ம.தி.மு.க. கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே திரு.வைகோ அவர்களுடன் இணை பிரியாமல் ஒரு போர்ப்படைத் தளபதியாக இருந்தவர் திரு.அ.கணேசமூர்த்தி அவர்கள். ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், ம.தி.மு.க. செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.