முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் சிகாகோவில் சைக்கிள் ரைடு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ள து.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல வீடியோக்களைப் போட்டுவருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோவில் நேற்று மாலை சைக்கிளில் ரைடு சென்றார். அவர் ஜாலியாக பாட்டுப் பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டினார்.
முதல்வர் ஓட்டிய வாடகை சைக்கிள்!
முதலமைச்சர் ஓட்டிச்செல்லும் சைக்கிளானது சிகாகோ போக்குவரத்துக் கழகமும் எவன்ஸ்டன் நகர நிர்வாகமும் வழங்கும் இ பைக் சேவையாகும். இவை டிவ்வி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. லிப்ட் (lyft) என்ற செயலி இவற்றின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
திவ்வி இ-பைக் சேவையை உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கென தனித்தனி கட்டணங்கள் உள்ளன. ஒரு டாலர் கட்டி சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நிமிடத்துக்கு 0.18 டாலர் வாடகை வசூலிக்கப்படுகிறது. இப்படி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கட்டண முறைகளைக் கொண்டுள்ளது திவ்வி இ பைக் சேவை.
நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட எளிதில் பஞ்சர் ஆகாத டயர்களைக் கொண்டவை, இந்த இ பைக்குகள். மூன்று வேகங்களில் செல்லக்கூடியவை. 18 கிலோ எடை கொண்டவை.
சைக்கிள் ஓட்டுபவர்கள் எப்பொழுதும் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் இரு கைகளாலும் பிரேக் அடிக்கவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு திவ்வி வலியுறுத்துகிறது.
இந்த சேவை குறித்து, “பாதுகாப்பான, ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதற்கும், சமத்துவத்தைப் பின்பற்றுவதற்கும், நகரத்தைப் பன்முகத்தன்மையைக் கொண்டதாக மாற்றுவதற்கான எங்கள் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும்.’’ என்று திவ்வி இ-பைக் தரப்பு கூறுகிறது.
சென்னையிலும் இதுபோன்ற வாடகை சைக்கிள் திட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எடுத்து ஓட்டிச்செல்ல பாதைகள் உள்ளனவா என்றால் கேள்விக்குறிதான்.
முதல்வர் சென்னைக்குத் திரும்பியதும் இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.