கோயம்பேடு பேருந்து நிலையம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளா்கள் சங்கக் கூட்டமைப்பின் (கிரெடாய்) தமிழ்நாடு பிரிவு சார்பில் ‘ஸ்டேட்கான் 2024’ என்ற இரண்டு நாள் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் நேற்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் எஸ்.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்வில் அமைச்சா் முத்துசாமி பேசியதாவது:
“நகர வடிவமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கான மேம்பாட்டுத் திட்டங்களாக விளங்கும் மாஸ்டா் பிளான் திட்டங்கள் தமிழகத்தில் 8 இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையம் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது. இது குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.
தற்போது வீட்டு வசதி வாரியத்தில் 3,000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அதை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விற்பனையாகாத வீடுகளை வாடகைக்கு விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.