டி.என்.பி.எஸ்.சி. 
தமிழ் நாடு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: 80% பணி முடிவு; டிசம்பர் முதல் வாரம் நியமன ஆணை- அமைச்சர் தகவல்!

Staff Writer

தமிழ்நாடு அரசின் தொகுதி 2, தொகுதி 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஆவது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நேற்று, பா.ம.க. தலைவர் அன்புமணி இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை மறுக்கும்படியாக அமைச்சரின் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இன்று காலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும்  25.2.2023 அன்று  தேர்வு நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர். இது ஒன்றிய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும் முதன்மை எழுத்து தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். இத்தேர்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக்கொள்ளும் கால அளவு சுமார் ஐந்து மாதங்களாகும். எனவே ஒன்றிய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை.

மேலும், இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது.  வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாட்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால் இப்பணிகள் ஆரம்பிக்க சற்றே தாமதமானது.” என்று அமைச்சர் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 

இதுபோன்ற தாமதம் தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் வரக்கூடாது என்பதற்காக சுமார் ஒரு கோடி ரூபாயில் போர்க்கால அடிப்படையில் இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது; இதனால் தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக மந்தனத் தன்மையுடன் செவ்வனே நடைபெற்று வருகின்றன; 80 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன; எஞ்சியுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி  நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.