அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்கள்கிழமையுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது.
இதனையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோர முடியாது என்றும், ஜாமின் தொடா்பாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடுமாறும் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆா்.இளங்கோ முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, அதைக் கவனத்தில் கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில்,“வழக்கு தொடர்பான விசாரணையைத்தான் தங்களால் நடத்த முடியும், ஜாமின் மனு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை நாடவேண்டும்” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். அப்போது, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, எம்.பி, எம்.எல்.ஏ. மீதான வழக்குகளைத் தான் இங்கு விசாரிக்க முடியும். ஜாமின் கோரும் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? முடியாதா? என்பதை அறிய உயர்நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்று வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.