சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த தமிழ் ஆசியர் சங்கருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவுகள் சர்ச்சையான நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான அடுக்கடுக்கான கேள்விகளை பலரும் முன்வைத்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை அசோக்நர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற விழிப்புணர்வு கூட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதலமைச்சருக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் உள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கூறியதாவது: “தவறை தெரிந்து செய்கிறார்கள், தெரியாமல் செய்கிறார்கள் என்பதை விட, அவர்களின் செயல் எந்தளவுக்கு மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான். இந்த நிகழ்வுக்கு காரண கர்த்தாவாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று நான்கு நாள்களுக்குள் காரணம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உரியத் தண்டனை வழங்கப்படும்.
அசோக் நகர் பள்ளி பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. இந்த பள்ளியில் இப்படி சம்பவம் நடந்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கண்பார்வையற்ற தமிழ் ஆசிரியரான சங்கர் மிகச் சிறந்த உதாரணம். என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்த நபரை சும்மா விடமாட்டேன். ஆசிரியர் சங்கருக்கு எதிராக பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும். காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுப்போம்.
என்னுடன் அவர் போட்டோ எடுத்ததை வைத்து விமர்சிப்பது தவறான செயல். ஒருநாளைக்கு நூறு பேர் என்னுடன் போட்டோ எடுக்கிறார்கள். என்னுடன் அவர் போட்டோ எடுத்ததால், அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது.” என்றார்.
தற்போது #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.