அமைச்சர் பொன்முடி 
தமிழ் நாடு

அமைச்சர் பொன்முடிக்கு 3 வருட சிறை தண்டனை! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Staff Writer

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 வருட சிறை தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை, 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும், வழக்கில் சேர்க்கப்பட்டார்.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய், அதாவது 65.99 சதவீதம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, வழக்கில் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், போதிய ஆதரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, 2017இல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இதற்கிடையே, இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், அந்த வழக்கின் மீதான தீர்ப்பை கடந்த 19ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது காவல் துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். இந்த வழக்கில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்து அவர்களது கருத்தை கேட்பதற்காக இருவரும் இன்று நேரில் ஆஜராக வேண்டும். எதாவது இடையூறு இருந்தால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகலாம் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.

அதன்படி, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அவர்கள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக, ஒரு மாதம் காலம் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பொன்முடி குற்றவாளி என உறுதியானதால், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.