வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.
வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜம் புயல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம்' புயலானது வடமேற்கு திசையில் மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.
இதையடுத்து வடக்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை முற்பகலில் புயல் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூா் தொடங்கி கடலூா் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். அதேபோல், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.