மதுரை உயர் நீதிமன்றம் 
தமிழ் நாடு

பாலியல் தொழிலுக்குப் பாதுகாப்பு கேட்ட வக்கீல்! இதெல்லாம் நியாயமாய்யா?

Staff Writer

பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு மனுதாக்கல் செய்த ஒருவருக்கு மதுரை உயர்நீதிமன்றம் 20,000 ரூ அபராதம் விதித்துள்ளது.

 கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாகர்கோவிலில் அறக்கட்டளை தொடங்கி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எண்ணெய் குளியல், பாலியல் சேவை ஆகியவற்றை வழங்கிவந்திருக்கிறார். பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 பிணையில் வெளிவந்த அவர் தான் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறியதுடன் தான் செய்துவரும் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டும் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி புகழேந்தி,’ வழக்கறிஞர் ஒருவர் தான் நடத்தி வந்த விபச்சார மையத்துக்கு பாதுகாப்பு கோருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் சட்டம் படித்ததற்கான சான்றிதழ்களைக் கோரியபோது அவை அளிக்கப்படவில்லை. வழக்கறிஞர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் இவ்வாறு செயல்படுவது துரதிர்ஷ்டம்’ என்று தீர்ப்பில் கூறியதுடன் இந்த  மனுவை தள்ளுபடி செய்தார். அத்துடன் மனுதாரர் உண்மையிலேயே சட்டப் படிப்பு படித்தாரா என்பது பற்றி விசாரிக்கவும் அவரது வழக்கு மீது 5 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தவர், மனுதாரருக்கு ரூ 20,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

அடடா இந்த நீதிமன்றம் இன்னும் எத்தனை விசித்திர வழக்குகளைத் தான் பார்க்க உள்ளதோ?